ஞாயிறு, 27 ஜூன், 2010

ஆங்கிலவழிக் கல்வி மோகம்

ஆங்கல வழி அடிப்படைக் கல்விதான் வேலைவாய்ப்பிற்கும் எதிர்காலத்திற்கும் பயன் தருவதாகவும் தமிழ்வழிக் கல்வியினால் பயன் ஏதுமில்லை என்றும் கூறி தம்முடைய மொழியைப் புறக்கணிக்கும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. காடுகளில் வாழும் உயிரினங்களில் கூட்டமாக வாழும் உயிரினங்களான ஆடு மாடு மான் போன்றவற்றின் எண்ணிக்கை எப்பொழுதும் அதிகமே. தனித்து இயங்கக்கூடிய சிங்கம் புலி போன்றவற்றின் எண்ணிக்கை குறைவுதான். எனவே எண்ணிக்கையைப் பற்றி கவலை தேவையில்லை. எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொண்டிருப்பது செம்மறி ஆடுகளுக்குத் தான் தேவை. இந்த செம்மறி ஆடுகளின் மனப்பான்மை எப்படி இருக்கும்? இவர்கள் எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருப்பவர்கள்.

இரு மறுபட்ட மனப்பான்மை கொண்ட மனிதர்களை எடுத்துக் கொள்வோம். ஒருவர் தொழிலதிபர், மற்றொருவர் கூலித் தொழிலாளி. ஆயிரம் ரூபாய் இருவருக்கும் கிடைத்தால் என்ன செய்வார்கள். தொழிலதிபர் அப்பணத்தை முதலீடு செய்வார். கூலித் தொழிலாளியோ அப்பணத்தை அன்றாட செலவிற்காக பயனபடுத்துவார். தொழிலதிபரால் அப்பணத்தை பெருக்க வைக்க வழிமுறைகள் தெரியும். எனவே துணிந்து முதலீடு செய்வார். ஆனால் கூலித் தொழிலாளிக்கோ வேலை செய்வதுதான் தெரியுமே அன்றி முதலீடு பற்றி ஒன்றுமே தெரியாது. தொழிலதிபர் என்பவர் ஒரே ஒரு விடயத்தைப் பற்றி மட்டுமே தெரிந்து கொண்டவரல்ல. தொழில் தொடபுடைய அனைத்து துறைகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அல்லது வல்லுனர்களின் தொடர்பு வைத்திருக்க வேண்டும். பண்முகத்திறன் கொண்டவராக இருப்பார்.

கூலித் தொழிலாளிக்கு பண்முகத்தின் இருப்பதில்லை. இருந்தாலும் துணிச்சலில்லை எனவே அவர் ஏதேனும் ஒன்றை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை. இதற்குக் காரணம் அவர்களின் மனப்பான்மை. இந்தக் கூலித் தொழிலாளியின் மனநிலையே ஆங்கில மோகத்திற்கு அகப்பட்டுக் கொண்டவர்களின் மன நிலையும்.

குழந்தைப்பருவத்தில் ஆங்கிலம் கற்காவிடில் பின் எப்போதும் கற்ற இயலாது என்ற எண்ணமும், ஆங்கிலம் என்றால் அது அறிவு என்ற எண்ணமும் இவர்களை இபபடி அகப்பட வைத்துள்ளது.

மொழி என்றால் என்ன? என்ற விழிப்புணர்வு இல்லை இவர்களுக்கு, ஒரு மொழியை எப்பொழுது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். குழந்தைப்பருவத்தில் அறிவு வளர்ச்சி, மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். இதற்கு தாய்மொழியே உறுதுணையாக இருக்கும் என்பது அறிவியல் உண்மை. இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்ற இந்தியர் இரவீந்தர நாத் தாகூர். இவர் தன்னுடைய 40 வயதிற்கு மேல் தான் ஆங்கிலம் கற்றார். அதன் பின்பு ஆங்கிலத்தில் இலக்கியம் படைத்தார். அவர் நான் குழந்தைப் பருவத்திலேயே ஆங்கிலம் கற்கவில்லை என்று சாக்குப் போக்கு கூறிக் கொண்டிருக்கவில்லை.

இந்த செம்மறி ஆடுகளின் கூற்றுப்படியே வைத்து ஆய்வோம். இட்லரைப் போல ஒரு செருமனி நாட்டை சார்ந்த ஒருவர் உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்தையும் கைப்பற்றினால் அவர் ஆங்கிலத்தையா இணைப்பு மொழியாக வைத்துக் கொள்வார். தன்னுடைய செருமனிய மொழியை எல்லா நாடுகளுக்கும் பரப்புவார், திணிப்பார். அந்த சூழ்நிலையில் இந்த செம்மறி ஆடுகள் அந்த வயதிற்கு மேல் செருமனிய மொழியை கற்பார்களா? அல்லது குழந்தைப்பருவத்திலிருந்து தான் ஒரு மொழியை கற்ற முடியும் என்று அடுத்த பிறவிக்கு ஆயத்தமாகிவிடுவார்களா?

இந்தி தெரியாததால் எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று புலம்பின் கொண்டிருக்கிற மனிதரின் மனப்பான்மையை ஆய்வு செய்து பாருங்கள். இவர்களின் கூற்று எப்படி உள்ளது தெரியுமா? தனக்கு கணிணி தெரியவில்லை அதனால் மருத்துவத்தில் என்னால் சாதிக்க இயலவில்லை என்பதாக உள்ளது. இந்தி தெரியாததால் வேலை கிடைக்கவில்லை என்றால் உடனடியாக இந்தியை கற்றிருக்க வேண்டுமே அன்றி புலம்பிக் கொண்டிருக்கக்கூடாது. அல்லது தனக்கு தகுதியான வேலையை தேட வேண்டும். எனக்கு எம் மொழியான தமிழ் மீது மிகுந்த பற்று உள்ளது. இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கக்கூடியவன். எம் பள்ளியில் இந்தியை கற்பிப்பதை எதிப்பவன். ஆனால் இந்தியை வளர்க்க இந்தி பிரச்சார சபை முலமாக தனி ஆர்வலராக சேர்ந்து இந்தியை கற்றேன். ஆனால் இன்று வரை இந்தி மொழியினால் எனக்கு எந்த பயனும் இல்லை. ஆங்கிலத்தையோ, இந்தியையோ கற்கக் கூடாது யாரும் கூறவில்லை (அரசியல்வாதிகளை தவிர) எம் அடையாளங்களான மொழி, நாகரிகம் மற்றும் பண்பாட்டை ஒழித்து அவர்களின் மொழி நாகரிகம் மற்றும் பண்பாட்டை வளர்க்க முற்படும் போது அதை எதிர்க்க வேண்டியது மக்களின் பொறுப்பு. அடிமை எண்ணம் கொண்ட மனிதனே யார் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொண்டு அப்படியே செய்வர்கள். ஆனால் சாதிக்க துணிந்தவர்கள் மற்றவர்கள் கூறுவதை கேட்டுக் கொள்வார்களே அன்றி அப்படியே ஏற்றுக் கொள்ள மாட்டர்கள். தனக்கு தக்கவாறு அதை மாற்றிக் கொள்வார்கள். அல்லது தனக்கு ஒத்து வராது என ஒதுக்கிவிடுவார்கள்.

எங்கள் இல்லத்திற்கு அருகில் ஒருவர் காவல்துறை துணை ஆய்வாளராக (S.I) வேண்டும் என உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் தகுதியுடன் இருந்தார். ஆனால் எழுத்துத் தேர்வில் தமிழில் எழுத வேண்டியிருந்ததால் அவரால் எழுத முடியவில்லை. தனக்கு தமிழில் எழுதப்படிக்க தெரியாததால் தன்னுடைய இலட்சியம் நிறைவேறவில்லையே என்று கவலைப்படவில்லை, புலம்பிக் கொண்டிருக்கவில்லை வேறு பணிக்கு சென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இலட்சிய வேட்கை உடையவர்களுக்கு எதுவும் தடையில்லை. எல்லாத் தடைகளும் வாய்ப்புகளே. ஆனால் புலம்பல் கூட்டமோ காற்றின் மீதும், மழையின் மீதும் வெய்யிலின் மீதும் காரணம் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

நடுவன் அரசில் இந்தி தெரியாததால் வேலைவாய்ப்பு இல்லை என்பது ஒரு சாக்குப் போக்கு. இது தமிழகத்தைப் புறக்கணிக்க ஒரு சாக்குப்போக்குத் தானே அன்றி உண்மையில்லை. இந்தி தெரிந்திருந்தாலும் வேறு ஒரு காரணம் கூறி புறக்கணிக்கத் தான் போகிறார்கள். இந்த புறக்கணிப்பை எதிர்த்தது, நமது உரிமைக்காகப் போராட வேண்டுமேயன்றி புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.

நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்திற்கு அந்நிறுவனத்தின் வாடிக்கையாளாராக கொரிய நாட்டு நிறுவனத்திலிருந்து அலுவலர்கள் வந்திருந்தனர். அவர்களின் மடிக்கணிணியில் ஆங்கிலம் இல்லை. ஆங்கிலம் இல்லாமலேயே மடிக் கணிணியை பயன்படுத்துகின்றனர். மேலும் அவர்கள் மொழிபெயர்ப்பாளரை அமர்த்திக் கொண்டார்கள். அவர்களுடைய தொழிலுக்கு மொழி ஒரு தடையல்ல. மொழி தெரியாமலேயே பல்வேறு நாடுகளில் தொழில் தொடர்பு வைத்திருக்கிறார்கள். தமிழைத் தவிர வேறு மொழியே தெரியாதவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பணிபுரிகின்றனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நாடு மற்றொரு நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. காலனி ஆதிக்கத்தின் காரணமாக அந்த நாட்டில் தங்களுடைய அடையாளங்களை ஏற்படுத்திவிடுகின்றனர். அடிமைகள் அதுவே வாழ்க்கை உலகம் என்று சுருங்கி விடுகின்றனர். விடுதலை மனப்பான்மை கொண்டவர்கள் அதை எதிர்த்து தன்னுடைய அடையாளங்களை நிலை நிறுத்துகின்றனர்.

எனவே ஒரு மனிதனின் வாழ்க்கையை மொழியோடு தொடர்பு படுத்துவது முற்றிலும் தவறானது. அவரின் வாழ்க்கையை நிர்ணயிப்பது அவருடைய மனப்பான்மையே அன்றி மொழியல்ல.

1 கருத்து: