சனி, 7 ஆகஸ்ட், 2010

சனநாயகம்

உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை கொண்டுள்ள நாடு நம் இந்திய நாடு என்று கூறிக் கொள்கிறோம். மக்களாட்சி என்றால் பெரும்பான்மையான மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சியை நடத்துவது. ஆனால் நிலைமை அப்படியா உள்ளது என்றால் பதில் இல்லை என்றே கூறவேண்டும். தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு விழுக்காடு ஆதரவு உள்ளது? வெறும் 20 விழுக்காட்டிற்குள் தான் இருக்கும். இந்த 20 விழுக்காடு 80 விழுக்காடு மக்களை ஆள்வதால் மாவோஸ்டு பிரச்சனை வெகு விரைவில் தலை தூக்கியுள்ளது. இந்த 20 விழுக்காடும் ஊழல் மற்றும் ஏமாற்று வழிகளில் தான். நேர்மையான வழியில் போட்டியிட்டிருந்தால்?

தற்போதைய அரசியல் அமைப்புச்சட்டப்படி நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ, உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் ஒருவர் வாக்களித்தால் அது சட்டமாகிவிடும்.

உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? தொகுதியில் யார் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ அவர் உறுப்பினராகிவிடுகிறார். அவர் ஒரே ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றாலும் அவர் உறுப்பினராகிவிடுவார். ஒரு வாக்கு குறைவாக பெற்றவர் உறுப்பினராக இயலாது.

எடுத்துக்காட்டாக ஒரு தொகுதியில் 
மொத்த வாக்காளார்களின் எண்ணிக்கை     1000
போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 6.

வேட்பாளர்
         ஆதரவு            எதிர்ப்பு
முதல் வேட்பாளர் 251 25.1%   749 74.9%
இரண்டாம் வேட்பாளர் 249 24.9%   751 75.1%
மூன்றாம் வேட்பாளர் 175 17.5%   825 82.5%
நான்காம் வேட்பாளர் 150 15.0%   850 85.0%
ஐந்தாம் வேட்பாளர் 80 8.0%   920 92.0%
ஆறாம் வேட்பாளர் 70 7.0%   930 93.0%

என வைத்துக் கொள்வோம் தற்போதைய நிலைப்படி முதலாமவர் வெற்றி பெறுகிறார். அதாவது மொத்த மக்கள் தொகையில் வெறும் 25 விழுக்காடு மட்டுமே ஆதரவு மற்ற 75 விழுக்காடு எதிர்ப்பு.

 75 விழுக்காடு மக்கள் ஆதரிக்காத ஒருவர் சட்ட மன்றத்திற்கு செல்கிறார். இதில் நிலையில் மாற்றம் வேண்டும். அதாவது குறைந்த பட்சமக 50 விழுக்காடு மக்களின் ஆதரவு சட்ட மன்றத்தில் ஒலிக்க வேண்டும். இதற்கு முதல் இருவரும் சட்ட மன்றம் செல்ல வேண்டும். இந்த உறுப்பினர்களுக்கு அவர்கள் பெற்ற வாக்குகளின் விகிதப்படி புள்ளிகள் அளிக்கப்பட வேண்டும். சட்டத்தை இயற்றும் போது கோரப்படும் வாக்குகள் ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்கு என்றில்லாமல் அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை அமையும். அதனடிப்படையில் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படும்.